தஞ்சாவூர்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கத்தின் இணையவழி அவசர ஆலோசனைக் கூட்டம், பேராவூரணியில் சங்க நிறுவன தலைவர் முனைவர் ஜி. ஆர். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறுவனர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்டாமலும், மாற்றுச்சான்றிதழ் இல்லாமலும் வேறு பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசின் உத்தரவால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
படிப்பு முடிந்து பள்ளியில் இருந்து செல்லும் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த முடிவால், பள்ளிகளை நடத்துவதில் நிர்வாக ரீதியிலான சிரமங்கள் ஏற்படும். எனவே, மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் பெற அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள்:
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கரோனா காலகட்டத்தில், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்காத நிலையில், பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குவது போல தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இந்த ஆண்டு மட்டும், அரசே இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க; ஆப்பிள் மரத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து போட்ட டிஐஜி