தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் 7 தனியார் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு என பிரத்யோக இருசக்கர வாகன நிறுத்துமிடம் இல்லாத நிலையில், விழா காலங்கள், திருமண விசேஷ நாட்களில், இருசக்கர வாகனங்கள் அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் நிறைவதால், கூடுதல் வாகனங்கள் நிறுத்த முடியாத அவல நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலைய தெற்கு புறத்தில் வழக்கறிஞர் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஜி எம் என்ற தனியார் இருசக்கர வாகன நிறுத்துமிடம் கடந்த 10 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதிலும் நேற்று திருமண தேதி என்பதால், நிறுத்துமிடத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்திட இல்லை என்ற நிலை இருந்துள்ளது. இதனை நேற்றிரவு பணியில் இருந்து ஊழியர் அண்ணலக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (52) வந்த வாகனங்களை நிறுத்த இடம் இல்லை எனக் கூறி திரும்பி அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், மப்டியில் வந்த நன்னிலம் டிஎஸ்பி கேம்ப் ஆபீஸில் பணியாற்றும் காவலர் வினோத் என்பவரையும் அப்படி திரும்பி அனுப்பியுள்ளார். அதற்கு நான் யார் தெரியுமா என மிரட்டியுள்ளார். அத்துடன் நிற்காமல், உதவிக்கு, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மே ஐ ஹெல்ப் யூ மையத்தில் சீருடையில் இருந்த மேற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் சுந்தரத்தை அழைத்து கொண்டு மீண்டும் இடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இருப்பினும் அவர், கூடுதல் வண்டிகளை நிறுத்தினால், ஏற்கனவே நிறுத்திய வண்டிகளை எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும் என மீண்டும் மறுக்கவே, ஆத்திரமுற்ற காவலர் வினோத், வாகன நிறுத்துமிட ஊழியர் அன்பழகனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதில் அவர் நிலை குலைந்து போயுள்ளார். எதற்காக தன்னை அடிக்கிறீர்கள் என சத்தமாக கேள்வி எழுப்பியதையடுத்து, அருகில் உள்ள இனிப்பகத்தில் உள்ள ஊழியர் வந்து காவலரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது குறித்து அன்பழகன் உரிமையாளர் மாணிக்கத்திற்கு தகவல் அளித்த பிறகு, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்த இடமில்லை என திரும்பி அனுப்பியதால், காவலர் ஆத்திரமுற்று, அத்துமீறி அராஜகமாக அங்கிருந்த ஊழியரை கன்னதில் அறைந்து தாக்கிய சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் தொடராமல், காவல்துறை உயர் அலுவலர்கள் விரைந்து சம்மந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.
இதையும் படிங்க: சரக்கை பிரிப்பதில் தகராறு - போதையில் ஒருவர் அடித்துக் கொலை!