தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகுபுலிகாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியான துவரமடை கிராமத்தில் உள்ள பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் மாரி என்பவரின் மனைவி விஜயா (வயது 60). இவருக்கு வயிற்றில் 12 சென்டிமீட்டர் நீளம் குடல் இறக்கம் ஏற்பட்டுக் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதை அடுத்து அவருக்கு வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவருக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அன்பழகன் அறிவுறுத்தலின் படி, மருத்துவர் பரத் மற்றும் நிறைமாத கர்ப்பிணிப் பெண் மருத்துவரான கோமதி மற்றும் மருத்துவக் குழுவினர், விஜயாவை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்குக் குடலிறக்கம் இருந்ததோடு வயிற்றில் கட்டி ஒன்றும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
அகற்றப்பட்ட கட்டி ஒரு கிலோ எடை உள்ளதாக இருந்தது என்றும், இந்த கட்டியை அகற்றுவதற்குப் பெருமளவு முயற்சி எடுத்துக் கொண்டதாகவும் மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது, அந்தப் பெண் பூரணமாகக் குணமடைந்து தனக்கு அறுவை சிகிச்சை செய்து தன்னை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டதோடு டாக்டர்கள் நல்லா இருக்கவேண்டும் என வாழ்த்தினார்.
இது மட்டுமில்லாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய பச்சிளம் குழந்தையையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியது பூரிப்பை ஏற்பட்டுள்ளது. மூளை நரம்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஹாசிமின் மனைவி உமைராஜ் சப்ரின் மகப்பேறு சிறப்பு மருத்துவராக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமைரா சப்ரினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும், அந்த குழந்தை தொடர்ந்து உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவர்கள் சீனிவாசன் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து, சிகிச்சை அளித்து ஐந்து நாள் போராட்டத்திற்குப் பின் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
இந்த நிலையில், தாங்கள் இருவரும் சிறப்பு மருத்துவர்களாக இருந்து வருகிறோம். நாங்கள் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வைத்து எங்களது குழந்தையைச் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். எங்களது நம்பிக்கை வீண் போகாமல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்கள் எங்களது குழந்தையைக் காப்பாற்றி விட்டனர். மருத்துவர்கள் ஆகிய நாங்கள் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வைத்து மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், சிறப்பு மருத்துவர்களின் குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தை ஆபத்தான நிலையிலிருந்தும் இதை நாங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றினோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
இந்த இரு நிகழ்வும் அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு இருக்கும் தவறான பிம்பத்தை உடைத்துள்ளது.
இதையும் படிங்க: நூற்றாண்டு கால ஓவியங்களால் ஜொலிக்கும் தஞ்சாவூர் அரண்மனை வளாகம்: ஓவியப்பணிகளை ரசிக்கும் பள்ளி மாணவர்கள்!