தஞ்சாவூர்: பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகேயுள்ள சோமேஸ்வரபுரம் கிராமம் மேலதெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் - பூஜா தம்பதி. கூலி தொழிலாளியான இவருக்கு ஆதேஷ் (5), அனிருத் (2) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆதேஷ் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் ஆதேஷ் பிறந்தது முதல் நெற்றியில் சிறிய கட்டி இருந்த நிலையில் சிறுவன் வளர வளர பெரிய அளவில் நெற்றியில் கட்டியுடன் அவதிப்பட்டு வருகிறான். குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், இந்த கட்டி அப்படியே உள்ளது. எனவே இந்த கட்டியை அகற்றுவதற்கு அதே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சிறுவனின் தந்தை வாசுதேவன் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி தற்போது கால் சரி வர நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
எனவே சிறுவனின் மருத்துவச் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, “மருத்துவ சிகிச்சைக்காக ஏற்கனவே வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்துவிட்டோம்.
தற்போது ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ உதவி வேண்டி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும், தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம். எனவே சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கூலி வேலைக்குச் செல்வோரை குறி வைக்கும் லாட்டரி கும்பல் - கண்டுகொள்ளாத போலீஸ்?