குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், நேற்றோடு 30ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்வகையில் இஸ்லாமியர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையிலும் மதுக்கூரில் நேற்று போராட்டம் நடந்தது.
அதன் ஒருபகுதியாக, மதுக்கூர் முக்கூட்டுச் சாலையிலிருந்து புறப்பட்ட கண்டனப் பேரணி பேருந்து நிலையம் வழியாகப் போராட்டம் நடைபெறும் பெரிய பள்ளிவாசல் திடலுக்குச் சென்றடைந்தது.
இந்தக் கண்டனப் பேரணியில் இஸ்லாமிய சிறுவர்களின் கைகளைக் கட்டி இழுத்துச் செல்வது போலவும், சிறைச்சாலை போல் கூண்டு அமைத்து அதில் சிறுவர்கள் சிறுமிகளை அடைத்து இழுத்து செல்வது போலவும், பாடைகளை ஏந்தியும் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை மத்திய - மாநில அரசுகளுக்குத் தெரிவித்தனர்.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., உள்ளிட்டவற்றிற்கு எதிராக முழக்கமிட்டவாறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்தக் கண்டனப் பேரணியில் பங்கு கொண்டனர். இந்தப் போராட்டத்தையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ரத்த தானம் வழங்கி நூதன போராட்டம்!