தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல்(72), இவரது மனைவி மாணிக்கம், மகன் பாஸ்கர். இந்த குடும்பம் சிறிய விவசாய குடும்பம். இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி சித்திரவேல் மலேசியாவிற்கு பணிபுரிய சென்றுள்ளார்.
அங்கு சித்திரவேலை அழைத்துச் சென்ற முகவர் இவருக்கு முறையான வேலைவாய்ப்பு பெற்று தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் பணி ஏதும் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக சித்திரவேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
இதையடுத்து, சித்திரவேல் தனது மகன் பாஸ்கருக்கு சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் பட்டினியில் அவதிப்படுவதாகவும், தன்னை ஊருக்கு அழைத்துவர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாஸ்கர் அங்குள்ள உறவினர் ஒருவரிடம் சித்திரவேலின் நிலைமையை எடுத்துக்கூறி அவரை ஊருக்கு அனுப்ப உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் முகவரால் ஏமாற்றப்பட்ட சித்திரவேலுக்கு பாஸ்போர்ட் இல்லாததை அறிந்த உறவினர், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கைவிரித்துள்ளார்.
அதன்பின், என்ன செய்வது என்று அறியாத பாஸ்கர், மனைவி மாணிக்கம் ஆகியோர் மிகவும் கவலையுடன் உள்ளனர். மேலும் வயதாகிவிட்ட நிலையில் சித்திரவேலை எப்படியும் உயிருடன் பார்த்துவிட வேண்டும் எண்ணத்துடன் நாட்களை எண்ணி வருகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்திரவேல் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: #ViralVideo: கடலூர் பாட்டியின் விழிப்புணர்வுப் பாடல்!