கும்பகோணம்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதை விரைவில் நிரூபிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஆனால், இடையில் அவரது தாயார் மறைவைத் தொடர்ந்து தேனியில் இருந்த ஓபிஎஸ் கடந்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் கட்சிப் பணியை தொடர்ந்து வருகிறார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மக்கள் மன்றம், நீதிமன்றம் இரண்டிலும் தங்களது தரப்பிற்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் ஓயப்போவதில்லை என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதோடு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தான் கூறியதை போலவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கியுள்ளார். அந்த வகையில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள கும்பகோணம் சென்ற அவருக்கு திங்கட்கிழமையன்று ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு எதிரே உள்ள ராயா கிராண்ட் என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்கினார்.
இதனைத்தொடர்ந்து, அவரைக் காண்பதற்கு சொகுசு விடுதியில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் அவருக்கு சால்வை, மாலை உள்ளிட்டவைகளை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதோடு மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.
தாயாரின் மறைவிற்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக கூறியதை செயல்படுத்தி வருவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சற்று களக்கத்திலும் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "பழைய விதிமுறைகள் தொடர்ந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்" - ஓபிஎஸ்!