தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பொய்யுண்டார் குடிகாடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் மயானத்திற்குச் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அதற்கு மாற்றாக பயன்படுத்தி வந்த பாதையையும் வேலி வைத்து அடைத்ததால் மயானத்திற்குச் செல்ல வழியின்றி தவிக்கின்றனர்.
30 ஆண்டு காலமாக தவித்துவரும் இந்த மக்கள், ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பார்வதி என்பவர் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை மயானத்திற்குக் கொண்டுசெல்ல பாதை இல்லாததால் பாரதியின் உறவினர்கள் அவரது உடலை வீட்டின் வாசலிலேயே வைத்துக்கொண்டு உறவினர் காத்திருந்துள்ளனர்.
இது குறித்து வட்டாட்சியரிடம் முறையிட்டபோது வழியை ஏற்படுத்தித் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மயானத்திற்கு நிரந்தரப் பாதை அமைத்துத்தரும் வரையில் பார்வதியின் உடலை அடக்கம் செய்யப் போவதில்லை என உறவினர்கள் கூறியதையடுத்து, அவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், உடலை எடுக்க உறவினர்கள் சம்மதித்துள்ளனர்.