தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிர்ப்புக்கு இடையே நேற்று(ஜூலை 17) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்விற்கு கும்பகோணத்தில் உள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் சாலையில் உள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தாமரை பள்ளியில் தேர்வு எழுத வேண்டிய சிலர் கும்பகோணத்திற்கும், கும்பகோணம் தாமரைப்பள்ளியில் தேர்வு எழுத வேண்டிய சிலர் தஞ்சாவூருக்கும் சென்றதால் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது. இரு தேர்வு மையங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 50 கிலோ மீட்டர். குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தால் கிடைத்த வாகனத்தில் தேர்வு மையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே இதேபோல் தேர்வு மையத்திலும் குழப்பம் ஏற்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. இதுவரை இதனைக் களைய எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் இது போல் குழப்பம் தொடராமலும் கடைசி நேரத்தில் ஒரு மையத்தில் இருந்து இன்னொரு மையத்திற்கு 50 கி.மீ தூரத்தைக் கடக்க, உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொள்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் நுழைவுத் தேர்வு - கடும் கெடுபிடிக்கு மத்தியில் தொடங்குகிறது...