தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (G. Nammalvar) மற்றும் நெல் ஜெயராமன் (Nel Jayaraman) ஆகியோரது நினைவு தினத்தையொட்டி இன்று (ஜன.7) மூன்றாம் ஆண்டு இயற்கை உணவுத் திருவிழா (3rd Annual Natural Food Festival) தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், பொதுமக்களிடையே இயற்கை உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரபு விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன.
இன்று மனித சமூகம் பல்வேறு நோய் நொடிகளுக்கு ஆளாகி அவதியுற வேளாண்மையில் பயன்படுத்தும், பூச்சிக்கொல்லி மருந்துகள், உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தும் செயற்கை ராசனப் மருந்துகள் ஆகியவையே காரணமாகும். இவை நமது உணவே நமக்கு நஞ்சாகிப் பல கேடுகளை கேடுகளை தருகின்றன. தொடர்ந்து, பல்வேறு வகையான நோய் நொடிகளுக்கும் காரணமாக விளங்குகின்றன.
நாம் மறந்த நஞ்சில்லா உணவுகள்: எனவே நெல் ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோர் காட்டிய வழியில், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மை முறையையே கடைபிடிக்கவும், அதன் வழியாக கிடைக்கும் பொருட்களான நஞ்சில்லா உணவுகளையே, பொதுமக்களும் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
இயற்கையோடு ஒன்றிய ஆரோக்கியத்துடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, தொடர்ந்து 3வது ஆண்டாக கும்பகோணத்தில், நெல் ஜெயராமன் மற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண் உணவு பொருட்கள் திருவிழா இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு கும்பகோணம் பாணாதுறை மேனிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
இதில் நமது பாரம்பரிய அரிய நெல் வகைகள் யானை கவுனி, கருப்பு கவுனி, சிகப்பரிசி, உள்ளிட்டவையும், சீரக சம்பா, யானை கவுனி, பல்வேறு வகையான அவுல்கள், நவதானிய உருண்டைகள், சிறுதானிய உணவு பொருட்கள், முறுக்கு, தேன் நெல்லி, கமர்கட், தானிய உருண்டை வகைகள், நாட்டுச்சர்க்கரை, மண்பாண்டங்கள், கத்தாழை சோப், வேப்பிலை சோப், மஞ்சள் சோப், சுண்டல் மசால், கொள்ளு சூப், கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், முள்ளங்கி, உள்ளிட்ட பலவிதமான பாரம்பரியமிக்க மரபு காய்கறி விதைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி நிறுவனர், சேர்மன் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி இராமமூர்த்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், வேளாண்மை செம்மல், இயற்கை மருத்துவர் கோ.சித்தர் உள்ளிட்ட பலர் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். தொடர்ந்து, இவ்விழா நாளையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஜிட்டல் கடன்பெறும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை