தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த க.அன்பழகன் உள்ளார். இந்த நிலையில், அண்ணாலக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட முகுந்தநல்லூர் என்ற கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருவதாகவும், இதனால் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததாகவும், இதன் காரணமாக அவர்களால் மின் இணைப்பு பெற முடியாமல் இருந்ததும் எம்எல்ஏ அன்பழகனின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த அவல நிலையால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகுந்தநல்லூர் கிராம மக்கள் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்ற தகவலும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இது குறித்து உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் எம்எல்ஏ அன்பழகன் பேசி உள்ளார்.
அப்போது, இந்த அவல நிலைக்கு மிக விரைவில் தகுந்த நடவடிக்கை எடுத்து, முகுந்தநல்லூர் கிராம மக்களுக்கு நல்ல தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரே வாரத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட முயற்சியால், முகுந்தநல்லூர் கிராம மக்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (மே 22) மாலை முகுந்தநல்லூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் 17 விளிம்பு நிலை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்துள்ளார்.
இந்த விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இதனையடுத்து சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாட்டிலேயே அதிகமான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முன்னோடியாக முதலிடத்தில் உள்ளது.
அதுபோலவே, குடும்ப அட்டைகள் வழங்குவதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகளுக்கான விசாரணை ஒரு வார காலத்தில் முடிக்கப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படுகிறது. ஒன்றரை மாத காலத்திற்குள் அனைத்தும் நிறைவு பெற்று, மனுக்கள் நிலுவையில் இல்லாத நிலையில் மாநிலத்தில் முதலிடத்திலும் உள்ளது என்பதில் பெருமை அடைகிறேன்.
இவை தவிர, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 2ஆம் இடத்தில் இருக்கிறது” என தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், அண்ணலக்ரஹாரம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியருக்கு ப்ளக்ஸ் பேனர் வைத்து, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய நரிக்குறவர் இன மக்கள்!