பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியில் ராஜமாணிக்கம் மகன் சகாதேவன் (48) என்பவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டின் மேல் மாடியில் சாந்தி (50) என்பவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குடி வந்துள்ளார். சாந்தியின் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மகள் துளசி தேவி (23) இரண்டு பேத்திகள், இரண்டு வளர்ப்பு நாய்களுடன் இந்த வீட்டிற்கு குடி வந்துள்ளார்.
துளசி தேவிக்கு இரண்டு வயதிலும், எட்டு மாதத்திலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 23) காலை முதல் இவர்களின் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்து, சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அந்தப் பகுதி கிராம நிர்வாக தனி அலுவலர் சுமதி, வீட்டு உரிமையாளர் முன்னிலையில் காவல் துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சாந்தி தூக்கில் தொங்கிய நிலையிலும், துளசி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் அவிழ்த்து கீழே கிடத்தப்பட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர். இரண்டு பேத்திகள், நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகப்பட்டனர்.
இரண்டு குழந்தைகள், நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, துளசி தூக்கில் தொங்கி உயிரிழந்த பிறகு, அவளது உடலை தூக்கில் இருந்து அவிழ்த்து கீழே கிடத்திவிட்டு, அதன்பிறகு அவரது தாயார் சாந்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.
இறந்த நால்வரின் உடலும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாய்களின் சடலங்கள் பட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்.
இதையும் படிங்க... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: காவல் துறை விசாரணை!