தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுகத்தில் நாட்டிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் இன்று (நவ.15) திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை மும்பையிலிருந்து ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதே போல் கர்நாடகாவில் உள்ள ஹூப்பள்ளி உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூரில் திறக்கப்பட்ட உணவு அருங்காட்சியகம் ரூ 1.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா - உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பழங்கால தானியச் சேமிப்பு முறைகள் உலகளாவிய - உள்நாட்டு சேமிப்பில் உள்ள சவால்கள், உணவு தானிய உற்பத்தி சூழ்நிலைகளை விளக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாய நிலத்திலிருந்து மக்களின் தட்டுக்கு உணவு தானியங்களின் பயணம் பற்றிய தகவல்களின் உள்ளடக்கத்தை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உணவு அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "இது இந்தியாவின் வேளாண்மை சார்ந்து இருந்து தன்னிறைவுக்கான பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம் இனி இந்தியாவின் விவசாய வரலாற்றின் தாயகமாக இருக்கும். பிரதமர் மோடியின் கீழ், விவசாயிகள் இந்தியாவிற்கும் உலகிற்கும் உணவளிக்கவும், நல்ல வாழ்வாதாரத்தை ஈட்டவும் உதவுவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
‘உணவுப் பாதுகாப்பு’ என்ற வார்த்தை உலகின் அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'உணவு பாதுகாப்பு' என்பது 'விவசாயி பாதுகாப்பு' என்பதற்கு இணையானதாகும். 'விவசாயி பாதுகாப்பு' உடன் 'நுகர்வோர் பாதுகாப்பு' வருகிறது. இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இணையற்றது, இதன் விளைவாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அதிக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பைப் பெருக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுகின்றன. மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் உன்னதமானது" என்றார்.
இதையும் படிங்க: பாஜக மாநிலங்களவை தலைவராக பியூஷ் கோயல் நியமனம்!