தஞ்சாவூர்: மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம் இணைந்து முதல் முறையாக பசுமை மருத்துவ மாநாடு, இரண்டு தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு (செப் 9,10) நடைபெற்றது. 'இன்வெஸ்டிகான் 2023' (Investicon 2023) என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில், மருத்துவ பரிசோதனை முடிவுகளை மருத்துவர்கள் எளிதில் சரியாக புரிந்து கொண்டு உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் பல்வேறு தலைப்புகளில் விளக்க உரையாற்றினர்.
இந்த விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இயற்கைக்கு எதிராக வாழக்கூடியவர்கள் மனிதர்கள் மட்டும்தான். மனிதர்களால் இன்றைக்கு மிகப் பெரிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுதும் ஏற்பட்டிருக்கின்ற இந்த அச்சுறுத்தலுக்கு நாம் தயாராக வேண்டும்.
தமிழ்நாட்டின் கடற்கரை பரப்பளவு 1,076 கிலோ மீட்டர், இந்தியாவின் நீளமான கடற்கரை கொண்டிருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதில் 14 மாவட்டங்கள் கடற்கரையோரம் உள்ளன. இந்த 14 மாவட்டங்களில் இன்றைக்கு உலகம் வெப்பமயமாதால், பனி உருகுதல், மற்றும் கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட பல பேரிடர்களை எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கிறோம். காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தி முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
பயோ சீல்டு: கடற்கரையோரம் இருக்கின்ற பகுதிகளில் பயோ சீல்டு என்கின்ற முறையில் கடலோர பகுதிகளில், பனைமரம், புங்கைமரம், வேப்பமரம் ஆகிய மரங்களை நடவு செய்து பசுமை போர்வையாக மாற்றுவது எங்கள் இலக்கு. அதை முதல் கட்டமாக தொடங்கி இருக்கிறோம். நமக்கும் நமது அடுத்த தலைமுறைக்கும் ஒரே ஒரு இயற்கை, ஒரே ஒரு பூமி மட்டும் தான். அந்த பூமியை காப்பதற்காக மரங்களை நடவு செய்வோம், இயற்கையை பாதுகாப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடங்குளம்; மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் பின்னடைவு!
கார்பன் நியூட்ரல் திட்டம்: பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மெய்யநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் பசுமை தமிழகம் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கில், ஆண்டிற்கு 10 கோடி மரங்கள் நடவு செய்கின்ற பணி நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை கார்பன் நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற இலக்கை நோக்கி புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கி இருக்கிறோம்.
இதன் முக்கிய குறிக்கோள் டெல்டா மாவட்டத்தில் எந்தவித நச்சுத் தன்மை தரக்கூடிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. விவசாயம் சார்ந்த பகுதி, வனப்பரப்பு அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் கார்பன் நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்கிற திட்டத்தை விரைவில் தொடங்கி 2041ஆம் ஆண்டிற்குள் இந்தப் பகுதி முழுவதும் கார்பன் சமநிலை அடைகின்ற வகையில், திட்டத்தினை விரைவில் வகுத்து செயல்படுத்த இருக்கிறோம்" என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலையோரம் நின்ற வேன் மீது மினி லாரி மோதி கோர விபத்து - 7 பெண்கள் பலி!