தஞ்சாவூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சையில் ரூ.140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய திட்டப்பணிகளை வருகிற 27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனையடுத்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், ஆம்னி பஸ் நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேற்று (ஜூலை 23) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரிடம் “முதலமைச்சரை வரவேற்க டான்ஸ்லாம் வச்சிருக்கியா” என அமைச்சர் நேரு கேள்வி கேட்க, அதற்கு டான்ஸ் இருக்குன்னா, வந்து பாருங்க, நீங்க சின்னபுள்ளையா ஆதிகாலத்துல பார்த்ததெல்லாம் இப்ப கிழவி ஆயிடுச்சி, புது ஆளா இறக்கி இருக்கேன்னு எம்எல்ஏ சந்திரசேகர் சொல்ல ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட அங்கு கூடியிருந்தவர்கள் சிரித்ததால் கலகலப்பு ஏற்பட்டது.
மேலும் பேசிய சந்திரசேகர், “இவங்க அப்பா எப்ப இவருக்கு கல்யாணம் செய்தாரு தெரியுமா, மஞ்சபை எடுத்துட்டு தஞ்சாவூரு இவர் (நேரு) வந்துட்டாரு, ஆடக்கார தெருவில் எங்கடா பையன காணோம்னு தேடினா இங்க வடக்கு வாசல்ல இருக்காரு. உடனே கல்யாணம் செய்து வச்சிட்டாரு இவங்க அப்பா” என்று சொல்லி மேலும் கலகலப்பு ஊட்டினார்.
பின்னர் முதலமைச்சரை வரவேற்க மாநகராட்சி சார்பில் விளம்பரம் போர்டுகள். பிளக்ஸ் கட்டினா முதலமைச்சர் திட்டுவாரு, ரொம்ப பிளக்ஸ் வைக்காதீங்க. கவுன்சிலர் எல்லோரையும் வரச் சொல்லி தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார். முன்னதாக அலுவலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு விழா தொடர்பான சில ஆலோசனைகளை தெரிவித்தார்.
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம், அறிவியல் பூங்கா, மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் அமைக்கும் பணி, சூரிய ஒளி மின் நிலையம் அமைத்தல், கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி, ராஜகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம் அமைத்தல், அழகி குளம் மேம்படுத்தும் பணி என ரூ.140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்டப் பணிகளை வருகின்ற 27-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திமுக கூட்டணி தர்மம் பார்த்தால் நல்லது செய்ய முடியாது" - சசிகலா குற்றச்சாட்டு!