தஞ்சாவூர்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் பயணிக்கும் ஆண்டில் வரும் மாசி மாதத்தில் மக நட்சத்திரமும் பௌர்ணமி தினமும் இணைந்த நன்நாளில் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தாண்டு நடக்கிறது. இதையடுத்து வருகிற 2028ஆம் ஆண்டு நடைபெறும். இந்த விழா கும்பகோணம் மாநகரில் உள்ள பன்னிரண்டு சைவத்திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ தலங்களுடன் இணைந்து ஒருசேர நடைபெறும்.
இவ்வாண்டிற்காண மாசிமக பெருவிழாவின் தொடக்கமாக, இன்று காலை காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலிலும், அதனை தொடர்ந்து நண்பகல் ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் என்று 5 கோயில்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மொத்தம் ஆறு சைவத்திருத்தலங்களில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. எஞ்சிய திருத்தலங்களில் ஏகதின உற்சவமாக மார்ச் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாசி மகத்தன்று மட்டும் விழா நடைபெறுகிறது.
ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில், பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் அருகே விசேஷ பட்டு சாற்றி, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் ஜபித்து, விசேஷ பூஜைகள் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, நந்தியம்பெருமான் வரையறப்பெற்ற திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் அலங்காரதீபமும், பஞ்சார்தியும் செய்யப்பபட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்