தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டை, அசூர் புறவழிச்சாலை, திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதி சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழி மறித்து பணம், செல்போன் மற்றும் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து வழிப்பறி மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கும்பகோணம் நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை வளையப்பேட்டை ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாராசுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், முகேஷ், அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூர், கோவையில் வேலை செய்து வரும் நால்வரும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த போது வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழிப்பறி சம்பவங்களில் இரண்டு நபர்கள் உள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இரண்டு நபர்களையும் தனிப்படை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்த வழிப்பறி சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பெற்ற குழந்தைக்கு மது கொடுத்து சித்ரவதை செய்த தாய்!