கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓருமுறை உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா நடைபெறுகிறது. மகாமக விழாவில் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றாக சோமகலாம்பிகா சமேத பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் விளங்குகிறது.
மகா பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை பிளக்க சிவபெருமான் பாணபுரம் எனும் இத்தலத்தில் இருந்து பாணம் தொடுத்ததாக புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் பாணம் தொடுத்த இடம் என்பதால் இந்த ஊர் பாணாதுறை எனும் பெயர் பெற்றது. இறைவன் பாணபுரீஸ்வரர் இறைவி சோமகலாம்பாள், வியாச முனிவர் காசியில் பெற்ற சிவபிரதோஷம் நீங்க இறைவன் கட்டளைப்படி மகாமக திருக்குளத்தில் நீராடிய பின் பாணபுரீஸ்வரரை வழிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கதேச மன்னன் சூரசேனன், தனது மனைவி காந்திமதி கொடிய குஷ்டநோயினால் அவதியுற்ற போது பாணபுரீஸ்வரரை வணங்கிய பின் அவரது மனைவியின் நோய் நீங்கி குணமடைந்து ஆண் மகனையும் பெற்றதாக இந்த தல வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற சைவத் திருக்கோயிலில், 2023 ஆம் ஆண்டு ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உலக மக்கள் அனைவரும், தொற்று நோய் அச்சங்கள் நீங்கி நலமுடன் வாழவும், ஆனந்தம் ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கவும், நன்மைகள் பலகூடி வரவும், நல்லருள் கிடைக்க வேண்டியும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.
கோயில் சன்னதியில், பாணபுரீஸ்வர சுவாமி மற்றும் சோமகலம்பிகை அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சீர்வரிசை சமர்ப்பித்தல் நிகழ்வும், நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணமும் நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!