தஞ்சாவூர்: மணஞ்சேரி அடுத்த களப்புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் தொடர்புடைய இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் முருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி குரு மூர்த்திக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.
முருகனுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அவரது வீடு இருக்கும்பகுதியில் கடந்த 5ஆம் தேதி , ரவுடி குரு மூர்த்தி நாட்டு வெடிகுண்டு வீசியதாக சொல்லப்படுகிறது. நாட்டு வெடிகுண்டு அருகில் உள்ள வீரசோழன் ஆறு தலைப்பு என்னும் பகுதியில் உள்ள கட்டடத்தில் விழுந்து சேதமானது. இதுதொடர்பாக இருதரப்பினரும் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், ரகசியத் தகவலின்பேரில் கடந்த 7ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையினை துவக்கினர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் மற்றும் தஞ்சாவூர் தடய அறிவியல் நிபுணர்கள் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொள்வது குறித்து கிடைத்த தகவலை அடுத்து ரவுடி குருமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஆகியோர் தலைமறைவாகினர்.
தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்ட நிலையில், தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கும்பகோணம் பாரதி நகரைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தபெதிகவினர் கைது