தஞ்சாவூர்: கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயில், மகாமக பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி பெருவிழா, கொலு காட்சி, உற்சவருக்கு மாலை வேளையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விசேஷ அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் என பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
மேலும் இந்த நாட்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொலு காட்சியை காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் வந்து செல்வர். இந்த வகையில் நடப்பாண்டு இந்த விழா, புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினமான அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5 ஆம் தேதி விஜயதசமி சவாமி அம்பு விடுதலுடன் நிறைவு பெறுகிறது.
இதற்காக தற்போது இக்கோயிலில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான சிறிதும் பெரிதுமான 60க்கும் மேற்பட்ட 3 அடி முதல் 6 அடி வரை உயரம் கொண்ட பழங்கால பொம்மைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வண்ண காகிதங்கள் ஒட்டி அழகுபடுத்துதல், அரங்குகள் அமைப்பு, திரைசீலைகள் அமைப்பு, கூடுதல் மின் விளக்குகள், அலங்கார மின் விளக்குகள் ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அரங்குகளில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, பெருமாள் உள்ளிட்ட தெய்வ உருவங்கள் மட்டுமல்லாது, பழங்கால பொம்மைகளை கொண்டு, தர்பார் மண்டபம் (இந்திரசபை), காலிங்க நர்த்தன கிருஷ்ணர், பாம்பாட்டி, இடையர்-இடைத்தி, செட்டியார் பொம்மை, திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள், குறவன்-குறத்தி, விவசாயி என விதவிதமான கொலு காட்சிப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த ஏற்பாடுகள் திருக்கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில், ஜெகன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் உள் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு முதுநிலை கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்