தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் மற்றும் கபிஸ்தலம் மணி அறக்கட்டளை நிறுவனர் தீ.கணேசன் ஆகியோரது சிலைகள் திறப்பு விழா மற்றும் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கபிஸ்தலம் மணி அறக்கட்டளையின் நிறுவனர் தீ.கணேசன் சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று நிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "தமிழகத்தில் தற்போது அரசியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் அனைவரும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு பதவிப்பிரமாணம் ஏற்றவர்கள் தான் ஆளுநர் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும்.
அரசியல் சட்டத்தில் என்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதோ அந்த விதிமுறையை ஆளுநர் செயல்படுத்த வேண்டுமே தவிர அவருக்கென தனி அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்தவகையில் அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை போட்டி அரசாங்கத்தை நடத்தலாம் என்று ஆளுநர் தமிழக அரசுக்கு போட்டி அரசாங்கம் செய்து வருகிறார். இவ்வாறாக அரசியல் சட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார், தமிழக ஆளுநர்.
அதன் காரணமாக தான் எந்த ஒரு ஆளுநரும் செய்யாத ஒரு செயலை நம் தமிழக ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநடப்பு செய்வதுபோல் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, அரசியலை கொச்சைப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம், யாரை வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை விட்டு நீக்கலாம் அது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை (It Is The Prerogative Of The Chief Minister) என்பது அரசியல் சட்டம். அந்த உரிமையில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அரசியல் சட்டத்தில் முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஒரு பகுதியை ஒப்புக்கொண்டு மறுபகுதியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என ஆளுநர் கூறுவது ஏற்புடையது அல்ல. தற்போது நடைபெறுவது ஆளும் ஆட்சியோ, குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்ல. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆளும் மக்கள் ஆட்சி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "செந்தில் பாலாஜியின் வழக்கை பொறுத்தவரையில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனையில் அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டியவரை பார்த்து 'விசாரணை ரெம்ப முக்கியம்' என்று கூறினால் என்ன அர்த்தம்? தூக்கு தண்டனை கைதியாக இருந்தால் கூட சிறைச்சாலையில் நாள்தோறும் மருத்துவ பரிசோதனை செய்வார்கள். காரணம் என்னவென்றால், அவர்களது உடல்நிலை கூட சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், அதற்கு மாறாக நடைபெறுகிறது என்று சொன்னால் இவர்கள் பழிவாங்கும் அரசியலுக்கு ஒத்திகை பார்கிறார்கள் என்றுதான் பொருள்.
அதற்கு காரணம், தமிழகத்தில் மக்கள் ஆதரவு கிடையாது, சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முடியவில்லை, கூட்டணி கட்சிகளை உடைக்க முடியவில்லை. ஆகவே இதுபோன்று வேறு எந்த வழியிலேனும் குறுக்கு சால் ஓட்டி இந்த ஆட்சியை பற்றி களங்கம் ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் ஏதாவது அவதூறு பரப்ப நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. அடிக்க, அடிக்க, வேகமாக எழும்பும் பந்து போல தான் திமுக அரசு இருக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக கூறுகிறேன்" என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
இதையும் படிங்க: கருணாநிதி நூற்றாண்டு விழா: கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்!