தஞ்சை: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், ப்ரகன் நாட்டியாஞ்சலி பவுன்டேசன் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ப்ரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் கடந்த 18 ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. நாளையுடன் (பிப்.24) நிறைவு பெறும் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து 51 குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
நாள்தோறும் பெரிய கோவில் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சியை கலைஞர்கள் வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர். நாட்டிய நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான நேற்று (பிப்.22) கோழிக்கோடு டாக்டர் சுகந்தி, டாக்டர் பாரதி சிவாஜி குழுவினரின் மோகினி ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ப்ரகன் நாட்டியாஞ்சலி பவுன்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன், கெளரவ செயலாளர் பொறியாளர் முத்துகுமார், எல்ஐசி ராஜா உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸா! ஓபிஎஸா! - அதிமுக யாருக்கு? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!