தஞ்சாவூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையின் இரண்டாம் நாளான இன்று தஞ்சாவூரில் பரப்புரை மேற்கொண்டார். அங்கு, தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது பேசிய கமல்ஹாசன், "விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும். அரசின் தேவைக்கேற்ப மானியம் வழங்கக்கூடாது. மக்களின் பிரச்சினையை தீர்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிராம சபை கூட்டம் நடத்தினோம். வெற்றிகரமாக இருந்ததால், எங்களை பார்த்து மற்றவர்களும் அதுபோல் நடத்தி வருகிறார்கள்.
நேர்மை என்பது உங்களிடம் இருந்து வரவேண்டும், பிறகு எங்களிடம் இருந்து வரவேண்டும் அப்போது நடுவில் உள்ளவர்கள் தானாகவே மாறி விடுவார்கள் என தெரிவித்த கமல்ஹாசன், தஞ்சையில் 51 வார்டுகளிலும் சாக்கடைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. நாங்கள் சோழர் காலத்து நீர்நிலைகளையே சீரமைக்க வந்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, "எம்ஜிஆர் கொடுத்த தமிழ் பல்கலைகழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம். சரஸ்வதி மஹால் நூலகம் மொத்தமாக களவு போகும் முன்பு அதை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் உலகத்திலேயே எடை குறைவான செயற்கைக்கோளை உருவாக்கிய தஞ்சையை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீனுக்கு கமலஹாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!