தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ராட்சசி படத்திற்காக 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருது மேடையில் ஜோதிகா பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
விருது பெற்றுக் கொண்டு விழா மேடையில் பேசிய ஜோதிகா, தஞ்சையில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றபோது, தான் பார்த்த வருந்தத்தக்க சில விஷயங்களைப் பதிவு செய்தார்.
“பிரகதீஸ்வரர் கோயில் மிக அழகாக உள்ளது. உதய்பூர் அரண்மனை போன்று உள்ளது. அதே நேரம், படப்பிடிப்புக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது அது அடிப்படை வசதிகளற்று, பராமரிப்பற்று இருந்தது. நாம் கோயில்களைப் பராமரிக்க அதிக செலவு செய்கிறோம். கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுகிறோம். அதே போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள்” என தனது வருத்தத்தை வேண்டுகோளாக விருது மேடையில் பதிவு செய்தார்.
சமூக வலைதளங்களில் சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வந்த இந்த காணொலிக்கு ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பதிவாகத் தொடங்கின. குறிப்பாக ஜோதிகாவின் இந்த விமர்சனம் ஆன்மிகவாதிகளை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது .
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ் மாநிலக் குழுவினர், ஜோதிகாவிற்கு ஆதரவும், அவருக்கு எதிராகக் கருத்துக்களை பரப்புவோருக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ”தன் கருத்தை சொல்வதற்கு ஜோதிகாவிற்கு உரிமை உண்டு. ஜோதிகாவின் இக்கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இன்று அரசு பள்ளிகள் போதுமான கட்டமைப்பு வசதிகளற்றுக் கிடக்கின்றன. பல பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமலும் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.
ஜோதிகா பேசிய இந்த காணொலியில் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டும் எடுத்து பதிவிட்டு இந்து கோயிலை ஜோதிகா இழிவு படுத்திவிட்டதாகவும், அவர் இந்து கோவில்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் பொய்யான தகவல்களை ஃபேஸ்புக்கில் பரப்பி வருகின்றனர். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கிருந்து தமிழகத்திற்கு பிழைப்புக்கு வந்தவர் என்றும், இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, மிகவும் இழிவான அரசியலை செய்து வருகின்றனர்.
ஒரு பெண் என்பதாலேயே ஆபாசமான சொற்களையும், பாலியல் நிந்தனைச் சொற்களையும் பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர். சிலர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளனர். நடிகை ஜோதிகாவின் கேள்வியில் அர்த்தம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளனர்.
”ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக தஞ்சை சென்ற நடிகை ஜோதிகா, அங்கு தஞ்சை பெரிய கோயிலின் எதிர்ப்புறம் உள்ள அரசு மருத்துவமனையைச் சென்று பார்த்துள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையாக உள்ளதே என்பது நடிகை ஜோதிகாவின் வேதனை. அங்கே நோயாளிகள் பகுதியை அவர் சுற்றிப் பார்த்தபோது, குழந்தைகளுக்குக்கூட உரிய இடமின்றி மக்கள் படும் துயரங்களைப் பார்த்துக் கலங்கியுள்ளார்.
வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் இந்த பெரிய கோயிலின் எதிரில், இப்படி ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவனையா என்பது அவரது வேதனையாக இருந்ததால், கோயில்ளுக்கு நிகராக மருத்துவமனைகள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் எங்கே பிழை? எப்படி இது கோவிலுக்கு எதிரானதாகும்?
தனது பிள்ளைகளுக்கு பெரிய கோயில் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கி சென்றவர் அவர். இந்த கரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய சர்ச்சைகளை கிளப்புவது மனசாட்சியற்றது” என்று திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஜோதிகாவை இழிவுபடுத்தி பதிவிட்டுவரும் மதவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கி.வீரமணி, “நடிகை ஜோதிகா அவர்கள் இந்நாட்டு குடிமக்களில் ஒருவர். அவருக்கு சுதந்திரமாக தன் கருத்துகளைக் கூற முழு உரிமை உண்டு. அதனைத் திரித்துக் கூறி, இப்படிச் சில மதவெறியர்கள், கண்டனம் தெரிவிப்பதில் என்ன பொருள் இருக்கிறது? மதவெறுப்புப் பிரசாரத்தைத் தொடங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவற்றைப் பற்றி விரிவாக எழுத வேண்டிய நேரமல்ல இது.
மக்களின் அவதியைப் போக்க அனைவரும் ஒன்றுபட்டு, மதம், ஜாதி, கட்சி இவற்றை மறந்து அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்தோடு பார்க்கவேண்டிய நேரத்தில், திருமதி. ஜோதிகா அவர்கள் கூறிய கருத்தை நோக்கி, அதையும்கூட திரித்து இப்படி ஒரு மதவெறுப்புப் பிரசாரத்தைத் தொடங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில், அவர் போன்றவர்கள் மட்டுமல்ல, எவரும் உண்மைகளைக் கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி, நல்லிணக்கத்தை சிதைக்கக் கூடாது” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்".
ஆயிரம் அன்ன சத்திரங்கள் வைத்து வருவோருக்கெல்லாம் தினமும் உணவு அளிப்பது, பத்தாயிரம் ஆலயங்கள் அமைத்து திருப்பணிகள் செய்து கடவுளுக்கு தொண்டு செய்வது, உலகில் உள்ள எல்லாவகை தருமங்களையும் செய்து நமது பெயரை நிலைநாட்டுவது எல்லாவற்றையும்விட, ஒரே ஒரு ஏழைக்கு கல்வியறிவு கொடுப்பது என்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்று பாரதியார் கூறுகிறார்.
இங்கு பாரதியாரின் கூற்றை ஜோதிகா கூறியது, வெவ்வேறு கோணங்களில் திரிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழை பாதிக்கப்படுகிறான் என்பதை மறந்து, மதத்தின்மீது பரிதாபம் காட்டும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆலயம் தொழ வேண்டும் என்றால் அதற்குக் கல்வி அவசியம், அந்தக் கல்வியை நாம் தொழ வேண்டுமென்றால் நமக்கு உடல்நலம் மிக முக்கியம். இவற்றை பாடசாலைகளும் மருத்துவமனைகளும்தான் நமக்குத் தரும். ஏழைக்கு கல்வியும், மருத்துவ வசதியும் செய்து தந்தாலே அவர்கள் வாழ்வு முன்னேற்றத்தை நோக்கி நகரும்.
இதையும் படிங்க: ஜோதிகா குறித்து முகநூலில் இழிவாகப் பதிவு - நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வேண்டுகோள்!