தஞ்சாவூர் மாவட்டம் திருபுறம்பியம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமாக சீனிவாசப் பெருமாள் கோயில், சுமார் 200 ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்தக் கோயிலை ஜெயலட்சுமி என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இதில் நேற்றை முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் செய்துவிட்டு நிர்வாகி ஜெயலட்சுமி கோவிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மாலை பூஜைகள் செய்வதற்காக ஜெயலட்சுமி தனது உதவியாளர்களுடன் கோயிலுக்கு வந்தபோது, கோயில் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டு அதில் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான சீனிவாசப் பெருமாள் சிலை, முக்கால் அடி உயரம் உள்ள பத்மாவதி தாயார் சிலை, முக்கால் அடி உயரமுள்ள மற்றொரு சீனிவாசப் பெருமாள் சிலை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சடாரி உள்ளிட்ட வெள்ளியிலான பூஜை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்தத் தகவலறிந்து வந்த சுவாமிமலை காவல் துறையினர் கொள்ளை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் சிலைகளுடன் அங்கிருந்த ஏணியைக் கொண்டு மதில் சுவரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் திருப்புறம்பயம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்