சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி இந்திய பெண்களில் 30 விழுக்காடு பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது சர்ச்சையான இந்தக் கருத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்ச் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசிய கருத்தைத் திரும்ப பெறுவது மட்டுமின்றி, பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். பொதுவாக ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் செல்கிறபோது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா? என சந்தேகம் தோன்றுகிறது.
ஒருவேளை, வெளிநாட்டுக்குச் சென்று விட்டு திரும்பும் போது, பதவி பறிபோகுமா? என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.