தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆதரவற்ற பலர் ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட நெருங்கிய நண்பர்களான ரமேஷ், பார்த்திபன், சரவணன் ஆகியோர், ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவளிக்க முடிவு செய்தனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலை அருகே உள்ள ஈஸ்வரி நகரில் வசிக்கும் இவர்கள், தங்களின் இந்த முயற்சிக்கு எவ்வித நன்கொடையும் பெறுவதில்லை. சுகாதாரமான முறையில் தயாரித்த உணவுப் பொட்டலங்களை நாளொன்றுக்கு 200 பேருக்கு வழங்கி வருகின்றனர்.
உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மேசையில், சுயசேவை, இலவச உணவகம் என்று அச்சிடப்பட்ட பதாகையில், ’தேவைப்படுவோர் எடுத்து சாப்பிட்டு பசியாறவும்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, ’பொதுநல நோக்கத்துடன் இப்பணியை செய்கிறோம். உணவை மேசை மீது வைத்து எடுத்துக் கொள்ள சொல்லி வழி காட்டியிருப்பதால் கரோனோ பரவாமல் தடுக்க முடியும். முழு ஊரடங்கு முடியும் வரை இந்த பணி தொடரும்’ என்றனர்.
இதையும் படிங்க:’அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது இழுக்கல்ல’ - கரோனா அனுபவத்தைப் பகிர்ந்த ரோகிணி