தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தஞ்சை பெரிய கோயில் ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ராஜராஜ தேவர் மற்றும் அவரது பட்டத்தரசி லோகமாதேவியார் செப்பு சிலைகள் குஜராத் சாராபாய் அருங்காட்சியகத்திலிருந்து 72 நாட்களுக்குள் மீட்கப்பட்டது.
சிலைகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் ஒப்புதல் மற்றும் உத்தரவின்படி தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் நிறுவப்பட்டு சுமார் 1800 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், சிலையை திருடிய சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நீதிமன்ற விசாரணை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இக்கோயிலில் 2018 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று போடப்பட்டது.
அதில் ஸ்ரீராஜராஜேஸ்வரம் (பெரிய கோயில்) என்று சொல்லக் கூடிய கோயிலில் பெயர் கூட இன்று இல்லை, சுவாமி பெயரும் எங்கும் இல்லை, தமிழ்நாடு அரசு எங்களுடைய வேலை இல்லை என்று கைகாட்டக் கூடாது. காரணம் கோயிலின் வெளியில் கூட பெயர்ப் பலகை வைக்கலாம். தமிழ் பெயர்களும், தமிழ் மன்னர்களின் பெயரும் வேண்டும், மறதியில் இருந்தால் மன்னிக்கலாம், தெரிந்து இருந்தே போடவில்லை என்றால் நச்சு எண்ணம் உள்ளது என்று அர்த்தம்.
கால பூஜைகளில் கல்வெட்டில் கூறியவாறு ஸ்ரீராஜராஜேஸ்வரம் உடைய மகாதேவர், பரமசாமி என்ற பெயரில் பூஜைகள் செய்யப்பட வேண்டும். இதுபோல் தமிழ்நாட்டில் எல்லா கோயில்களிலும் உண்மையான பெயரில் அந்தந்த இறைவனுக்கு ஒரு கால பூஜை நடத்த வேண்டும். மேலும் இந்த அரசாங்கம் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறுகிறார்கள், ஆனால் தமிழ் தெரியாத உயர் அதிகாரிகளை நியமிக்கின்றனர்.
அந்த உயர் அதிகாரியால் கோர்ட்டில் வாதாட முடியுமா, உயர் அதிகாரி பொதுமக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டிற்கு சென்று விட்டு பேனா மட்டும் வாங்கி வந்தனர், சிலையை கொண்டு வரவில்லை. தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலிருந்து மொத்தம் 38 விக்ரகங்கள் திருடு போய்விட்டன. அதில் 2 மீட்கப்பட்டுவிட்டது, மீதம் உள்ள 36 சிலைகளை கொண்டு வர வேண்டும்.
மீட்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கடந்த 3 வருடத்தில் ஒரு சிலையைக் கூட கொண்டு வரவில்லை. எந்த வித பலனும் இல்லாமல் நான் வேலை பார்க்கின்றேன், எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக புகார் மனு விரைவில் அளிக்க உள்ளது.
மேலும் ஒன்றரை வருடமா அமைச்சரை உற்று நோக்கி வருகின்றேன். அதிலிருந்து விடுபட முடியாது. குஜராத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கேட்டு கொண்டு வர வேண்டும். இதில் இருப்பவர்கள் Highly Moneyied people, அவருக்கு கொடுத்துள்ள பட்டம் ராவ் பகதூர் என்றும் கூறினார்.
முக்கியமாக ராஜராஜ சோழனின் அக்காள் ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியாரால் 4 செப்பு திருமேனிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் தட்சிணமேருவிந்தகரின் தெய்வத் திருமேனியின் ஜோடியான உமாபரமேஸ்வரி, தஞ்சை விந்தகர் தெய்வத்திருமேனியான உமாபரமேஸ்வரி, ராஜராஜ சோழனின் தந்தையான துஞ்சியதேவர் செப்புத் திருமேனி, ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி போன்ற சிலைகள் பெரிய கோயிலில் இன்று இல்லை.
மேலும் தஞ்சை அழகர் என்ற தெய்வத் திருமேனி மீட்கப்பட்டு தஞ்சை கலைக்கூடத்தில் உள்ளது. அவற்றை பெரிய கோயிலில் வைக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகள் தீவிரம்..! கண்காணிப்பு மையங்கள் ஆய்வு!