தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அம்மாபேட்டை ஒன்றியம் கோவிலூர், நல்ல வன்னியன் குடிக்காடு, செண்பகபுரம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும் என்றும், தற்போது மழை பெய்து வருவதால் நெல்லை காயவைக்க முடியாத நிலை உள்ளதால், அரசு 17 சதவீத ஈரப்பதத்திற்கு பதிலாக, 20 சதவீத ஈரப்பத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதோடு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து அறுவடையாகும் நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லாததால், விவசாயிகள் தரையில் நெல்லைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என கூறியதால் அங்கு வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையும் படிங்க : குளம் ஆக்கிரமிப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!