தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.100 கோடியினை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும் எனவும்;
விவசாயிகள் பெயரில் வங்கியில் கடனாக வாங்கிய ரூ.300 கோடி தொகையை வங்கியில் செலுத்தி விவசாயிகளை கடன்களில் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளிடம், இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கையில் கரும்புடன் சார் ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
அதன் பிறகு கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4,000-ம் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வழங்காமல் விவசாயிகளை புறக்கணிப்பதாகக் கூறி தலையில் முக்காடு போட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி