தஞ்சை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்குட்பட்ட சாக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர், கார்த்திகேயன் (42). இவர் பாஜக ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். இவரது வீட்டின் பின்புறத்தில், கருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை தனக்கு இலவசமாக எழுதித் தரும்படி கார்த்திகேயன் வற்புறுத்தி வந்ததாகவும், அவ்வாறு தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சிவக்குமார் நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் அளித்ததார். அதன்படி கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் மூன்று முறை அழைத்திருந்தபோதும், கார்த்திகேயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி, திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார், சாக்கோட்டையில் உள்ள கார்த்திகேயன் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த கார்த்திகேயன், தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இருப்பினும், போலீசார் கார்த்திகேயன் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, கையொப்பம் இடப்பட்ட வெற்றுப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அவர் பயன்படுத்தி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் கார்த்திகேயனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாஜக மாநில நிர்வாகி வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாக உள்ள கார்த்திகேயன் மீது இரு கொலை வழக்குகள், மூன்று கொலை முயற்சி வழக்குகள், கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு வழக்குகள், கும்பகோணம் தாலுகா, நாச்சியார்கோயில் என பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த கிருத்திகாவைக் கடத்திய வழக்கில் தந்தை கைது!