தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வட மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட கூர்கா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், குறிப்பிட்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்துச் சென்று, காவல் பார்க்கும் பணி செய்து, அதற்காக மாதம் தோறும் குறிப்பிட்ட சிறிய தொகையை ஒவ்வொரு குடியிருப்பிலும், வணிக நிறுவனங்களிடம் பெற்றும் தங்கள் வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர்.
இதே போலக் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியிலும் சில கூர்க்காக்கள் மாதம் தோறும் கிடைக்கும் சிறு தொகைக்காக, இரவில் காவல் கண்காணிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் மேலக்காவேரி யானையடி பகுதியில் வசித்து வரும் ரமேஷ் பகதூர் என்ற கூர்கா போதையில் கும்பகோணம் திருவையாறு சாலையில், ஒரு இரு சக்கர வாகனத்தை எடுத்து ஓட்ட முயற்சி செய்வதும், போதையில் தடுமாறி பலமுறை கீழே விழுந்து எழும் காட்சிப் பதிவு, தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை.. மனமிறங்குமா மத்திய அரசு?
இது குறித்து விசாரித்த போது, இரண்டு சக்கர வாகனத்தைத் திருட முயன்றதாக துர்காவை அப்பகுதி மக்கள் சிலர் பிடித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், போலீசாரின் விசாரணையில், போதையிலிருந்த தன்னை அப்பகுதி மக்கள் சிலர் கிண்டலாக, இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடியுமா’’ எனச் சவால் விடுத்து உசுப்பேற்றியுள்ளனர், இதனைச் சவாலாக எடுத்துக் கொண்டு,போதையில் இருந்த ரமேஷ் பகதூர், அருகில் இருந்த இரு சக்கர வாகனத்தை ஓட்ட முயற்சித்ததாகவும் அப்போது வேண்டும் என்றே என்னை இரு சக்கர வாகனம் திருடியதாக போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இதனை அடுத்து கும்பகோணம் கிழக்கு போலீசார், ரமேஷ் பகதூரை இனி மேல் இத்தகைய வேலைகள் எதுவும் செய்ய கூடாது என கண்டித்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் தலைக்கேறிய போதையில் இருசக்கர வாகனம் ஓட்ட முயன்ற ரமேஷ் பகதூரின் காட்சி பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று முதுமலை வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. நீலகிரியில் மாற்றங்கள் என்ன?