தஞ்சாவூர் மாவட்டத்தின் வாளமர்கோட்டை கிராமம், கல்லணை கால்வாய் கோட்டத்திற்குள்பட்ட வடசேரி வாய்க்கால் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் பாசனதாரர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு தண்ணீர் வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும், கரைகளை அகலப்படுத்திடவும் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, நவாளமர்கோட்டையில் வயல்வெளியில் நடந்து சென்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அங்கு பணிபுரிந்த பணியாளர்களிடம் பெயர், காலையில் வருகை தந்த நேரம், பணிக்காக அளந்து கொடுக்கப்பட்ட விவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து பதிவேடுகளைப் பார்வையிட்டார்.
மேலும் அங்கு பணியாற்றிய பணியாளர்களிடமிருந்து மண்வெட்டியை வாங்கி சிறிது தூரம் வாய்க்காலை சீர்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.
அதேசமயம் வாளமர்கோட்டை ஊராட்சியில் உளுந்து பயிர் பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவு, அறுவடைக் காலம் ஆகியவை குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், தேவையான உரம் கையிருப்பு வைத்திடவும், தடையின்றி விநியோகம் செய்திடவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஜஸ்டின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.