தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனான பெருவுடையார் ஆலயம் உலகப் புகழ்பெற்று சிறந்து விளங்குகிறது. இக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகைதந்து கோயிலின் கட்டட கலையை பார்த்தும், சாமியை தரிசித்தும் செல்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020 பிப்ரவரி 5ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு அனைத்து சாமிகளுக்கும் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.
கோயிலின் பாதுகாப்புப் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறவிருப்பதால் முதல்கட்டமாக ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் காவல் துறை சார்பாக எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு பேராபத்து! - எச்சரிக்கும் சித்தர்கள்