தஞ்சை பெரியகோயில், கரோனா தொற்று காரணமாக மார்ச் 18ஆம் தேதி மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல், பிரதோஷ வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்று வந்தது.
கரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, பெரியகோயிலில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முதியவர்கள் தவிர்த்து பக்தர்கள் வழிபட கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், கோயிலுக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் குழந்தைகள், முதியோர்களை அனுமதிக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோயிலின் முன்பக்க கதவு சிறிது நேரம் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயில் நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.