கும்பகோணம் அருகே திருப்புறம்பயத்தை சேர்ந்தவர் ஐயன்பெருமாள். இவரது வீட்டு அருகே கொட்டகை அமைத்து கால்நடைகள் வளர்த்து வருகிறார். கொட்டகையில் ஆடு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகாமையில் இருந்த மண்ணியாறு என்ற ஆற்றிலிருந்து சுமார் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று அய்யன் பெருமாளின் மாட்டு கொட்டகைக்குள் புகுந்தது.
இதனைக் கண்டு ஆடு, மாடுகள் பயத்தில் பலத்த ஒலி எழுப்பின. சத்தம் கேட்டு அங்கு வந்த ஐயன் பெருமாள், கொட்டகையில் முதலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முதலையை பிடித்து கட்டி வைத்தார். பின்னர் முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் கொள்ளிடம் பகுதிக்குச் சென்று முதலையை ஆற்றில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.