தஞ்சாவூர்: கடந்த 26 நாட்களாக திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை வாங்கிய கடன் 300 கோடி ரூபாயையும், அரவை கரும்பிற்கான நிலுவைத் தொகை 100 கோடி ரூபாயினையும் உடனடியாக வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராடும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும், போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இந்நிலையில், வங்கிகள், கரும்பு விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வேளாண் துறை அமைச்சர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசவுள்ளோம்.
கரும்பு விவசாயிகள் பிரச்னையில் தீர்வு காண வேறு வழி இல்லை எனில் முதலமைச்சரை சந்தித்து அவர்களது நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைப்பேன். கரும்பு விவசாயிகளை ஏமாற்றிக் கடன் பெற்ற திருஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர் இராம தியாகராஜன், விவசாயிகள் பெயரில் கடன் அளித்த வங்கி மேலாளர்கள் உள்ளிட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: "பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் நல்லக்கண்ணு"