சென்னை: இந்திய ரிசர்வ வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு திடீரென ஏற்பட்ட உடல் அசெளகரியம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு (நவம்பர் 25) அனுமதிக்கப்பட்டார். இதை முதலில் தமிழ்நாடு காவல்துறை உறுதிசெய்திருந்தது. அதில், அவருக்கு லேசாக நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசெளகரியம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இன்று காலை தகவல் வெளியானது. அவருக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதாகவும், அதற்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிடிஐ நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், சக்திகாந்த தாஸ் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்று இன்று காலை வெளியிட்டிருந்தது. அதில், 'ரிசர்வ் வங்கி ஆளுநர் நலமுடன் இருப்பதாகவும், அசிடிட்டி தொல்லை காரணமாகவே அவர் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், டஅவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார்' எனவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சக்திகாந்த தாஸ் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்பினார் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.