கும்பகோணம்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைக்கும் ரெய்டு மற்றும் மோடி-அமித்ஷா கூட்டணி குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் நேற்று (ஜூன் 13) தனியார் தங்கும் விடுதியில் பேட்டியளித்துள்ளார்.அவர் பத்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சுதந்திரமாகவும், சுயாட்சியுடன் செயல்பட வேண்டிய வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும், மோடி- அமித்ஷாவின் கூட்டணியின் அடிமை அமைப்பாக செயல்படுகிறது” என குற்றம்ச்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக இருக்கிற எதிர்கட்சிகள் இந்த அமைப்புகள் வாயிலாக அடக்கி ஒடுக்கி, ஜனநாயக படுகொலை செய்து அதன் மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்க்கு பாஜக சகலவிதமான தில்லு முல்லு வேலைகளையும் செய்து வருகிறது என்றும், அதன் ஒரு பகுதி தான் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மட்டுமல்லாமல் துணை ராணுவம் துணை கொண்டு, தலைமை செயலகத்தில் இருக்கிற அவரது அறை வரை சென்று சோதனையிட்டுள்ளது. இதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:NR Elango: செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்கவில்லை - என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
மேலும் பேசிய முத்தரசன், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளும், அரசியல் அமைப்பு சட்டத்தினால் உருவக்கப்பட்ட வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையும் சுதந்திரமாகவும், சுயாட்சியாகவும் செயல்பட வேண்டியவை ஆனால் தற்பொழுது மோடி-அமித்ஷா கூட்டணிக்கு ஏற்ப செயல்பட்டு அடிமை அமைப்பாக செயல்படுவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய செயல்களால் தமிழகத்தில் திமுகவின் மீது அவதூறுகளை ஏற்படுத்தி விட்டு அவர்களை தனிமைபடுத்தி விடலாம். அப்போதுதான், தமிழகத்தில் பாஜாக தப்பித்துக் கொள்ளும் என மிக கீழ்தரமான முறையில் மோடி-அமித்ஷா கூட்டணி இயங்குகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, இது வெறும் ஊழல் பிரச்சனையாக பார்க்கவில்லை மாறாக இது ஜனநாயகத்திற்கு எதிரான படுகொலையாக பார்க்கிறோம் என்றும் இதனை எதிர்த்து களம் காண வேண்டிய அவசியம் ஏற்படும், கண்டிப்பாக களம் காண்போம், மற்ற தோழமை கட்சிகள், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து இதனை விரைவில் மேற்கொள்வோம் என்றும் திரு ரா முத்தரசன் மேலும் தெரிவித்தார்.பேட்டியின் போது அவருடன் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞர் மு.அ.பாரதி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீட் தேர்வில் வெற்றி பெற என்சிஆர்டி பாடப்புத்தகத்தை படித்தாலே போதும் - மாணவர் பிரபஞ்சன்