தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் ஜேஜே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் மின் சாதனங்கள் மற்றும் மிதிவண்டி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தொழில் சரிவர நடைபெறாத நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு வணிகவரித்துறைக்கு நில் ரிட்டன் பைல் செய்துள்ளார்.
அப்போது பட்டுக்கோட்டை வணிகவரி அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீதரன்(70) என்ற நபர், பக்தவச்சலம் வணிக வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது வணிகவரி அலுவலர் ஸ்ரீதரன், பக்தவச்சலத்தை அழைத்து, தனக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் எனவும், பின்னர் பக்தவச்சலத்திடம் உள்ள பில்களை எடுத்து வரச் சொல்லியும், முதலில் ஆயிரம் ரூபாயை கொண்டு வரும் படியும் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பக்தவச்சலம், கடந்த 2007 செப்டம்பர் 12ம் தேதி பட்டுக்கோட்டை வணிகவரி அலுவலர் ஸ்ரீதரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஸ்ரீதரன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அதனைத் தொடந்து அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கானது நேற்று (டிச.18) மீண்டும் நீதிபதி சண்முகப்பரியா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதரனுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும் மற்றும் சட்ட பிரிவு 13 (1)(d) உடன் இணைந்த 13 (2) ஊழல் தடுப்பு சட்டப்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராதம் கட்டத் தவறினால், மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மற்றும் சிறப்பு நீதிபதி சண்முகப்பிரியா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: நிரம்பிய வைகை அணை; கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!