தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்றன. இங்கு மாணவி ஒருவருக்கு கடந்த 11ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவியுடன் தொடர்பில் இருந்த இதர மாணவிகள் 56 பேருக்கு கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள் 56 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் குழு அமைத்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராஜுலு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, கரோனா பரவலை தடுக்க 35 குழுக்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்க நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கின என்பது நினைவுகூரத்தக்கது.