தஞ்சாவூர் மாவட்ட நகரின் மையப் பகுதியில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.இதனிடையே தமிழ் பல்கலைக் கழகம் அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, அங்கேயே செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாக நிதி நிதியின் கீழ் ரூ. 9.4 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இருவரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த அருங்காட்சியகத்தில் 10 மற்றும் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொருட்கள், தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், காவிரி பாசன முறைகள், சோழர்கள் காலத்து போர் ஓவியங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டுகள், வீணை, நாதஸ்வரம், தவில், கைவினைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதோடு பழங்கால சிற்ப காட்சியகம், உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நூலக காட்சி அறை, 7டி திரையரங்கம், கைத்தறி காட்சி அறை, சுவை தானிய பயிர்களால் ஆன தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பு, 2 ஏக்கரில் ராஜாளி பறவை மற்றும் அரிய வகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் வெளிப்புறம் செயற்கை இசை நீரூற்று வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை ஏராளமான குழந்தைகள், மாணவர்கள் பொதுமக்கள் என பார்வையிட்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது!