தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கடந்த 15ஆம் தேதியும் மாட்டுப் பொங்கல் 16ஆம் தேதியும் காணும் பொங்கல் 17ஆம் தேதியும் கொண்டாடப்பட்டன. காணும் பொங்கலை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவது வழக்கம். காணும் பொங்கலையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான பெரியகோவில், மணிமண்டப பூங்கா, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
காணும் பொங்கலைக் கொண்டாட தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வேன்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு தஞ்சைக்கு வந்திருந்தனர்.
பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வதற்கு வருகின்றனர். நேற்று காணும் பொங்கல் என்பதால் கோயில் வளாகத்திற்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கு கோ பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி சிவாச்சாரியர்கள் பசுக்களுக்கு மலர்தூவி மந்திரங்கள் ஓதி பூஜைகள் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: பல்வேறு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழா