தஞ்சை: உலகெங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா (Christmas Day) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு நேற்று (டிச.24) இரவு நடைபெற்றது. குறிப்பாக, மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள திருஇருதயப் பேராலயத்தில் சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, தஞ்சை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து பேராலயத்திற்கு வந்தனர். தஞ்சை நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயம், தூய இருதய ஆண்டவர் பேராலயம் என அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு, குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இயேசு பிறந்ததை நினைவுகூரும் விதமாக, குழந்தை இயேசு திருவுருவத்தை மாதா வேடமணிந்த பெண் வான தூதர், சூசையப்பர் வேடம் அணிந்தவருடன் வந்து பங்கு தந்தையிடம் கொடுத்தார். அந்த சொரூபத்தை பங்கு தந்தை பெற்றுக்கொண்டு, புனிதம் செய்து அலங்கரிக்கப்பட்ட திருப்பீடத்தில் வைத்தார். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. பின்னர், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ்: தக்காளிகளை கொண்டு மணற்சிற்பம் வடிவமைப்பு