தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (27). ஓட்டுநர் வேலை பார்த்து வந்த இவர், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கடந்த நவம்பர் 13ஆம் தேதி நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகச் சிதம்பரம் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அசோக் குமாரின் பாட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சில சிசிடிவி காட்சிகள் மூலம் அசோக் குமார் சோழபுரம் வீதியில் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் அசோக்குமாருக்கு நெருக்கமான கேசவமூர்த்தி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அசோக்குமாரை கொலை செய்து தனது வீட்டின் அருகில் புதைத்து வைத்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். பின்னர் அசோக்குமாரின் உடலைத் தோண்டி எடுக்கும் போது, அசோக்குமாரின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் புதைக்கப்பட்டு இருந்துள்ளது. உடல் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போக வேண்டும் என தோலை உரித்து புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அசோக்குமாரின் உடலைத் தேடிய போது, மற்றொரு மண்டை ஓடும் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது 2021ஆம் ஆண்டு காணாமல் போன கேசவமூர்த்தியின் நண்பர் அனாஸாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் கேசவமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் தன்பாலின ஈர்ப்புடையவர் என்பதும், இறந்த இளைஞருடன் கேசவமூர்த்தி ஓரினச் சேர்க்கையில் இருந்ததும், ஒரு கட்டத்தில் அசோக்குமார் மறுத்ததால் கொலை செய்ததாகத் தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேசவமூர்த்தியின் வீட்டில் நடத்திய சோதனையில், ஏராளமான கேப்சூல் மாத்திரைகளும், ஆயுதங்களும், ஒரு டைரியும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த டைரியில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயர்கள் இருந்ததால் அவர்களில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கேசவமூர்த்தியின் வீட்டைச் சுற்றி உள்ள பகுதியில் வேறு ஏதேனும் உடல்கள் அல்லது தடயங்கள் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
தற்போது கேசவமூர்த்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். மேலும், கடந்த ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் முகமது அனாஸ் மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுத்தது தொடர்பாக, சிறையில் உள்ள கேசவமூர்த்தியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறையினர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்த கேசவமூர்த்தியை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து 2 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், நேற்று கேசவமூர்த்தியை திருவிடைமருதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். தற்போது வரை மாயமானவர் வழக்காக இருந்த முகமது அனாஸ் வழக்கு, இனி கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்..! இருவர் கைது..!