தஞ்சாவூர்: கும்பகோணம் சுவாமி மலையிலுள்ள ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான சிலை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சிவகாமி அம்மன் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். பொதுவாக தமிழ்நாட்டில் ஐந்து அடிக்கு மேல் உயரம் கொண்ட உலோக சிலையை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்பதாலும், கண்டறியப்பட்ட உலோக சிலை தொன்மையான சிலை என்பதாலும் அதனை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சிலைக்கு உண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சிவகாமி அம்மன் சிலை பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த சிலை தமிழ்நாட்டிலுள்ள எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தி.மலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்!