தஞ்சாவூர் : மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 61 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடம், ஆம்னி பேருந்து நிறுத்தம், 14 மாநகராட்சிப் பள்ளிகள் சீர்மிகு பள்ளிகளாக மாற்றம் உள்ளிட்டத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முடிவுற்ற பணிகளான, சூரிய ஒளி மின் நிலையம் அமைத்தல், அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா அமைத்தல்(STEM PARK), காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி, கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, அழகி குளம் மேம்படுத்தும் பணி, அண்ணா சாலை வணிக வளாகம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் உடன் இருப்போர் தங்குமிடம் கட்டும் பணி ஆகிய 12 பணிகளை ரூ. 133 கோடியே 56 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் பொது நிதியின் கீழ் ஆணையர் குடியிருப்பு கட்டடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக புவிசார் குறியீடு பொருட்களான கலங்காரி ஓவியத்தில் திருவாரூர் தேர் வரையப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நினைவுப் பரிசாக முதலமைச்சருக்கு வழங்கினார்.
இவ்விழாவில் கே.என்.நேரு, எ.வ.வேலு,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக காலையில் தஞ்சாவூர் மாவட்டம், மனையேறிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தஞ்சையில் இருந்து விழாவிற்கு வந்த முதலமைச்சருக்கு தஞ்சாவூர் மாவட்ட திமுக கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் , தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும், பதாகைகளை ஏந்தி கொண்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விழா அரங்கில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் திறந்து வைத்தார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : பத்திரப்பதிவுத்துறையில் விரைவில் '3.0 சர்வர்'- அமைச்சர் மூர்த்தி தகவல்!