நாடு முழுவதும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை இ-சேவை மையம் மூலம் செலுத்தி வருகின்றனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் கிராமத்தில் விவசாயிகள் கடந்த 2019ஆம் ஆண்டிற்கான குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை திருவையாறில் அமைந்துள்ள தனியார் சேவை மையத்தில் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் பணம் செலுத்திய 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அந்த தனியார் சேவை மையம் உரிய ரசீது வழங்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்திற்கு 2,600 பயிர் காப்பீடு செய்து அதற்கான ரசீதை பெற்று உள்ளார். ஆனால் அந்த ரசீதை QR ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்தபோது சப்பானி முத்து என்பவர் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது பெயரில் கட்டிய பணம் வேறு ஒரு பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். மேலும் போலி ரசீது அந்த சேவை மையம் வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அந்த இ-சேவை மையத்திடம் கேட்டபோது உரிய பதில் வரவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
உரிய ரசீது வழங்காத விவசாயிகளின் பெயரிலும் இந்த முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் பயிர் காப்பீடு செய்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கவில்லை. எனவே, இந்த முறைகேடு குறித்து உடனடியாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.