திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் கவிஞருமான பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி மணிமண்டபம் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பாளையம் அருகில் அமைந்துள்ளது .
பட்டுகோட்டை அழகிரிக்கு மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் முறையாக பராமரிக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்துவருகிறது. இரவு நேரங்களில் மது அருந்துவோர், போதைப்பொருள் பயன்படுத்துவோர், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
ரூ. 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த மணிமண்டபம், சுற்றுச்சுவர் இல்லாமல் வெட்டவெளியாக காட்சியளிக்கிறது. இதனால், தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து இந்த மணிமண்டபத்தை மறைத்து வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
மணிமண்டபத்திற்காக போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு இயங்காததால் மண்டபத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு குடிக்க தண்ணீரும் கழிப்பிட வசதியும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் இங்கு வரும் சமூக விரோதிகள் சிலர் மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
அஞ்சாநெஞ்சன் அழகிரி என கவிஞர்களாலும் திராவிட இயக்கத்தினர் களாலும் போற்றப்படும் அழகிரி மண்டபம் பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக இந்த மண்டபத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து உரிய முறையில் பராமரிக்கவும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் உள்ளே நுழையாத அளவிற்கு காவலாளியை நியமனம் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ‘25ஆம் தேதி ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபம் திறப்பு’ - முதலமைச்சர்