தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் பொதுக்கூட்டம், மே 15ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “திமுகவை வீழ்த்துவது தான் நம்முடைய லட்சியம். அதுதான் எங்களின் எண்ணம். இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 30,000 கோடி மக்களின் பணத்தைச் சுரண்டி உள்ளனர். அதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதை சும்மாவிடப் போவதில்லை, இது குறித்து ஆளுநரை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மனு கொடுக்க உள்ளேன். மேலும், வரும் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. எனவே, ரூபாய் 30,000 கோடியை விசாரணை மேற்கொண்டாலே ஆட்டம் கண்டுவிடும்.
ரூ. 30 ஆயிரம் கோடி குறித்து பேசிய ஆடியோ வந்ததும் அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. விஷ சாராய பிரச்னையில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், 15 பேர் உயிர் போய்விட்டது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும், ''நாட்டில் எல்லோரையும் குடிகாரர்களாக ஆக்கப் பார்க்கிற அரசாக திமுக அரசு உள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.
“ஓராயிரம் ஓபிஎஸ் மற்றும் ஓராயிரம் வைத்திலிங்கம் வந்தாலும் துரோகச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. திமுகவிற்கு ஓபிஎஸ், வைத்திலிங்கம் இருவரும் B Team ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார். பின்னர், கட்சி நிர்வாகிகள் ஈபிஎஸ்-க்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.
மேலும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட, தஞ்சை மாவட்ட கட்சி நிர்வாகிகள், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கித் தலைவர் சரவணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தஞ்சாவூர் கலைத் தட்டு நினைவுப்பரிசாக வழங்கினார். அதே போல், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தாயார் படத்தை அவருக்குப் பரிசாக வழங்கினர். அப்போது அவர் உற்று நோக்கி தனது தாயாரைப் பற்றி அருகில் இருந்த நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும், அவருக்கு செங்கோல், பிரமாண்ட ஆளுயர ரோஜாப்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவையின் இளம் பெண் மாமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு! காரணம் என்ன..?